என் ஆன்மாவில் இருப்பவனே!
ஏக இறைவனே!
நினை நான் எப்படி புகழ்வேன்?
துன்பங்கள்
என்னை தீயாய் பொசுக்கும் போது
மழை நீராய் பொழிந்து
அவற்றை அணைப்பவனே
நான் ஒன்றுமில்லாத வெற்று நிலம் !
நீ தான் வளங்கள் தந்தாய்.
இந்த வெற்று நிலத்தில் இருக்கும்
மரஞ், செடி, கொடிகள்
மலர்கள், கனிகள் எல்லாம்
நீ விதைத்த விதைகள்
நீ பொழிந்த அருள்கள்
நான் எப்போதெல்லாம்
துயரச் சேற்றில் மூழ்குவேனோ
அப்போதெல்லாம் நீ தான்
கைகொடுத்து காப்பாற்றுகிறாய்!
நான் ஒரு தூசு!
காய்ந்த சருகு!
புயலில் அகப்பட்ட காகிதத் துண்டு!
ஆனால்
நான் அவமானப்படும் போதெல்லாம் - நீ
என்னை கௌரவப்படுத்துகிறாய்!
காயப்படும் போதெல்லாம்
சுகப்படுத்துகிறாய்!
எனது மனத் தரையில்
நீ 'எவரெஸ்ட்' மலையாய்
நிமிர்ந்து நிலைத்து நிற்கிறாய்
என்பது மட்டும் எனக்கு புரிகிறது!
அதனால்
என்னோடு எப்போதும்
நீ இருப்பது தெரிகிறது
என் மனக் காயங்களுக்கு
நீ மருந்தானாய்
என் கனவுகளுக்கு நீ
உயிர் கொடுத்தாய்!
என் இலக்குகளுக்கு நீ
வழி சமைத்தாய்!
வழி தெரியாத கானகத்தில்
நீ எனக்கு திசையானாய்
யாருமில்லாத பாலை வனத்தில்
நீ எனக்கு வழித் துணையானாய்
போலி மனிதர்களால்
நான் வாடும் போதெல்லாம்
நேய மனிதர்களின்
நேசத்தை தந்தாய்!
சோதனை தந்து
வேதனை தந்து
அதில்
போதனை தந்து
பின்
சாதனை தந்தாய்!
இறைவா!
எப்போதும்
நின்னை நான் நினைத்திருந்தாலும்
சரியாக உனக்கு
நன்றி செலுத்தத் தெரியாத
பாவியாக இருக்கிறேன்!
உன்னை நெருங்கத் துடிக்கும்
இந்த அடிமையின்
செயல்களை நீ அறிவாய் !
நான் லௌகீகக் கரையில்
வாழத் துடிப்பவன்!
ஆத்மீகக் கடலில்
மூழ்கத் துடிப்பவன்!
என் பிறப்புக்கு
அர்த்தம் கொடு!
என் இருப்புக்;கு
அர்த்தம் கொடு!
ஏக
இறைiவா
என்னை மன்னித்துவிடு....!
- கலாநெஞ்சன் ஷாஜஹான்
No comments:
Post a Comment