Sunday, July 19, 2015

சிந்தனை செய் மனிதா!




ஓ...மனிதனே!
எங்கே ஓடிக்கொண்டிருக்கிறாய்?
ஓய்வின்றி
பொருள் தேடி ஓடும் நீ
இதனைப் பற்றியும்
பொறுமையாய் சற்று யோசி!

மனிதா.... !
உன்  உறுப்புக்களை
உருப்படியாய் பயன்படுத்துகிறாயா?
நல்லவைகளை
தேக்கி வைத்துக் கொள்ளவும்;
தீயவைகளை
நீக்கி வைத்துக்கொள்ளவும்
உனக்குத் தெரியுமா?


மனம் ஒரு குப்பை!
அது
தேக்கி வைத்திருக்கிறது
ஆயிரம் தப்பை!
மனம் ஒரு பூங்கா வனம்
ஆதில் ஆயிரம் ஆயிரம்
பூக்களின் மணம்!

இப்போது சொல்
உனது மனம் உன் வசமா?
இல்லை
நீ அதன் வசமா?

இந்த உலகம்
ஓர் தங்கு மடம்
இந்த உலகம்
ஓர் தரிப்பிடம்
நாம் பயணம் போகிறோம்.
இறங்கும் இடம் வரும் போது
இறைவனே இறக்கி விடுவான்!

இந்த தேகத்திற்கு
மெய் என்றும் பெயர் உண்டு
பொய்யான மேனியை
மெய் என்கிறார்கள்!

பலர் நிழலுக்கும் நிஜத்திற்கும்
வித்தியாசம் புரியாமல்
அறியாமை இருளில்
பயணம் போய் கொண்டிருக்கிறார்கள்.

நீ இந்த உலகத்தையே
சுருக்கிக் காட்டியவன்.
உலகம் உனக்கு கிராமம்.

உன் கண்டு பிடிப்புக்கள்
ஆக்கத்திற்கு பயன்பட்டதை விட
அழிவுக்கு பயன்பட்டதே அதிகம்!
விஞ்ஞானக் கடலில்
மூழ்கிய அறிஞர்கள் பலர்
இறுதியில்
ஆத்மீகக் கரையில்தான்
ஒதுங்கியிருக்கிறார்கள்.

அதனால் மனிதா!
சற்று யோசி!


-    கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment