Saturday, December 7, 2013

விடுதலை கீதம் ஓய்ந்து விட்டது



ஒரு
கறுப்புச் சூரியன்
ஓய்வெடுத்துக் கொண்டது
நிரந்தரமாய்!

முழு நிலவு
முழுமையாய்
மறைந்தது
கால(னின்) மேகத்திற்குள்..!

சிறையை வென்றவரை
காலன்
சிறைப்படுத்திக் கொண்டான்!

ஒரு சகாப்தம்
நிறைவுக்கு வந்தது!
ஒரு நீண்ட வரலாற்றின்
இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டு விட்டது.
விடுதலை கீதம்
ஓய்ந்துவிட்டது

ஓ..
நெல்சன் மன்டேலா...!
இனத்தின் விடுதலைக்கு
வித்திட்ட
முத்து நீங்கள்.




கறுப்பின ஒதுக்கலுக்கு
வெள்ளை அடித்தவர்
நீங்கள்!

அடக்குமுறையை
அகிம்சையால் வென்ற
அரசியல்
அறிஞர் நீங்கள்.

எதிரிக்கு
மன்னிப்பை
பரிசாய் வழங்கிய
மனித நேயர் நீங்கள்.

அன்று
கூண்டில் அடைக்கப்பட்ட
கைதிப் பறவை
நீங்கள்!
ஆனால்
இனத்திற்கு தந்தீர்;கள்
சுதந்திர சிறகை!

மக்களுக்காய் வாழ்ந்தவர்
மரணிப்பதில்லை!
ஓ.... மன்டேலா!
நீங்கள்
இயற்கை எய்தவில்லை!
உலகுள்ள வரையில்
உன்னத வீரராய்
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
மக்கள் மனங்களில்.!

கலாநெஞ்சன் ஷாஜஹான் (நீர்கொழும்பு)


இக் கவிதை தமிழ் தந்தி (8-12-2013)  பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது

No comments:

Post a Comment