Tuesday, December 1, 2009


மனிதன்


மனிதன்
ஒரு வனம்!
எல்லா மிருகங்களும்
வாழும் கூடு
அவன் மனம்!
குரங்கு போல் தாவும்
அவன் குணம்!
விலங்கு போல்
கூட்டம் கூட்டமாய் பிரியும்
அவன் இனம்!
சிங்கம் போல் வேட்டையாடுவான்
அது பணம்!
ஒரு நாள் இறப்பான்
அப்போது அவன் பிணம்!


அபூர்வம்

குப்பைக்குள்
குண்டு மணி கிடைக்கலாம்!
ஆனால்
குண்டு மணிகளெல்லாம்
குப்பையில் இருப்பதில்லை!

ச(மி)த்ரு

உனக்கு
எதிரிகள் இருக்க வேண்டும்
நீயாக முன்னேற!


புதிர்

இதயம்
ஒரு இருட்டறை!
உள்ளே இருப்பது
உரியவருக்கும்
தெரியாது!


தென்றலும் புயலும்

சந்தோசத் தென்றல்
நெஞ்சைத் தொடும்
சந்தேகப் புயல்
வீசாதவரை!

பூக்கள்

செடியுல் பூப்பது பூ
திரியில் பூப்பது நெருப்பு
முகத்தில் பூப்பது சிரிப்பு
இதயத்தில் பூப்பது அன்பு


பெருமைகள்

பருவத்தில் பெருமை இளமை
அனுபவத்தில் பெருமை முதுமை
கண்ணுக்குப் பெருமை கூர்மை
பெண்ணுக்குப் பெருமை மென்மை
ஆடைக்குப் பெருமை வெண்மை
ஆடவருக்குப் பெருமை ஆண்மை
வெற்றிக்குப் பெருமை திறமை
தோல்விக்குப் பெருமை பொறுமை!

Tuesday, November 10, 2009

மீண்டும் எழுவோம்


மீண்டும் எழுவோம் மானிடரே-எங்கள்
மானுட வலிமை போதும் இங்கே
மீண்டும் தேசத்தை எழுப்பிடுவோம்-இனி
எங்கள் கரங்களை இணைத்திடுவோம்
(மீண்டும்)

புதிதாய் இனிமேல் பிறப்பெடுப்போம்-வரும்
புதிர்களுக்கெல்லாம் விடைக்கொடுப்போம்
சோதனை வந்தால் வேதனைதான்-அதன்
போதனை புரிந்தால் சாதனைதான்
நடந்தவை கடந்தவை மறந்தவையே-இனி
நடப்பவை யாவும் நல்லவையே
இயற்கையில் பாடம் நாம் படித்தோம் -இனி
ஐக்கிய தேசத்தை நாம் படைப்போம்

Saturday, November 7, 2009





சுனாமியும் நாங்களும்


2004 ம் ஆண்டின்
இறுதி மாதத்தின்
இறுதி பூரணைத் தினம் ! ..
( 26 ம் திகதி)

என்றும் போல்
அன்றும்
காலைப் பொழுது
இனிதாய்ப் புலர்ந்தது.

விடுமுறை தினத்தன்று
விடிந்த பொழுது
கொடுமையை கையோடு
கூட்டி வந்தது.

உதயம்
அஸ்த்தமனத்தை
அழைத்துவந்தது !





ஓலிம்பிக் வீராங்கனை சுசந்திகா


சுசந்திகா!
கறுப்புப் புயலே!

சிட்னி ஒலிம்பிக்கில்
வெண்கலத்தை வென்ற
வீரப் பெண்ணே!

நீ கால்களில் அணிந்திருப்பது
பாதணிகளா?
இல்லை! இறக்கைகளா?

அன்று
உன் கிராமத்தின்
தென்னந் தோட்டங்களில்
தென்றலாய் ஓடித்திரிந்தாய்!

இன்று
சிட்னி நகரில்
புயலாக அல்லவா
புதுமை புரிந்தாய்!

Monday, November 2, 2009






வெற்றிச் சூரியனே ! ஜய சூரியா!


“ஜய சூரியா“ !
வெற்றிச் சூரியனே !
உன் ஒளி
உலகெங்கும் பரவியிருக்கிறது.

நீ
கிரிக்கட் வரலாற்றில்
ஒரு மைல் கல்!

நீ
சாதனைப் புத்தகத்தின்
சரித்திரப் பக்கங்களில்
உனது பெயரை
பல முறை பதிய வைத்தவன் !
புதிய பக்கங்களை
திறந்து வைத்தவன்

ஒரு நாள் போட்டியின்
ஆட்ட வியூகத்தையே
மாற்றிக் காட்டியவன்!
“டெஸ்ட்” போட்டியில்
இணையாட்ட ஓட்டங்களால்
“எவரெஸ்ட்” டையே தொட்டவன்!

உலத பந்து வீச்சாளர்களுக்கு
உன்னைக் கண்டால்
சிம்ம சொப்பனம் தான்.

Saturday, October 31, 2009











மலையகம் தந்த முத்து ! முரளி எங்கள் சொத்து!





ஓ.....
உலக சாதனை வீரனே !
முத்தையா முரளிதரனே !
இந்தக் கவிதைப் பந்து வீச்சு
உனக்காக வடிக்கும்
கவிதா வாழ்த்து !

இன்று மட்டும் நீ
பார்வையாளனாக இரு.
ரசிகர்கள் நாங்கள்
இதய மைதானத்தில்
பாராட்டுப் பந்தெடுத்து
உனக்காக விளையாகிறோம் !

Wednesday, October 21, 2009

மொழி

மொழி என்பது
கருத்தை
பரிமாறிக் கொள்ளவே!
வெறுப்பை வளர்துகொள்ள அல்ல!

வெற்று மனிதர்கள்

பாதையை தொலைத்து விட்டு
பயணம் போவார்கள்
இலட்சியம் இல்லாதவர்கள்.

போராட்டம்

அன்பே!
சாதியைவென்ற
எமது காதல்
இந்த தேசத்தை போல
பெருமைக்குரியது என்றாய்.
உண்மை!
அதனால்தான்
நாம் இருவரும்
இன்னும் இணைந்து விடாமல்
எமது பெற்றோர்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

Wednesday, September 16, 2009




விடியல்


சூரியன்
ஆடை களைந்தான்.
இரவு மகள்
வெட்கப்பட்டு
மெதுவாக மறைந்து கொண்டாள்.

எனது தேசம்

அன்று
இந்து சமுத்திரத்தின் முத்து!
இன்று
அதன் கண்ணீர் துளி!
அன்று
மாணிக்கத் தீவு!
இன்று
புதைகுளி நாடு!
காதல்

பனித்துளி போல்
புனிதமானது!
விஷத்துளி போல்
ஆபத்தானது!
தென்றலைப் போல்
இதமானது!
புயலைப் போல்
கொடுமையானது!

நான் வாழ்வேன்

உயிர் மூச்சு
ஒடுங்கும் போதும்
என் பேனா எழுத வேண்டும் !
அழுகுரலின் மத்தியிலே
என் கவிதை சிரிக்க வேண்டும்!
இறந்த பின்பும்
இருந்திடுவேன்
நான் கவியாய்...
நான் கவியாய்...!
கவியாக்கம் :- கலாநெஞ்சன் ஷாஐஹான்
0714392857 – Mobile Phone Number
(இலங்கை)