Saturday, October 31, 2009











மலையகம் தந்த முத்து ! முரளி எங்கள் சொத்து!





ஓ.....
உலக சாதனை வீரனே !
முத்தையா முரளிதரனே !
இந்தக் கவிதைப் பந்து வீச்சு
உனக்காக வடிக்கும்
கவிதா வாழ்த்து !

இன்று மட்டும் நீ
பார்வையாளனாக இரு.
ரசிகர்கள் நாங்கள்
இதய மைதானத்தில்
பாராட்டுப் பந்தெடுத்து
உனக்காக விளையாகிறோம் !



சுற்றும் உலகப் பந்தை
சுழல் பந்து வீச்சால் வென்றவனே!

நீ
உன் பந்துக்கு
மந்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?
இல்லை
தந்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?

அது எப்படி
யந்திரம் போல்
விக்கட்டுக்களை வீழ்த்துகிறாய்?

உன் மந்திரக் கரங்களினால்
அக்கினிப் பந்தெடுத்து
சுழற்றி வீசி வருவதாலா
எதிரணி வீரர்கள்
அடிக்கடி ஆட்டமிழக்கிறார்கள்?

இல்லை...இல்லை
நீ
உன் பந்து வீச்சுக்குள்
வித்தைகள் பலவற்றை
ஒளித்து வைத்திருக்கும்
மாயாஜால வித்தைக்காரன்!

இந்து சமுத்திரத்தின் முத்தாம்
இலங்கைத் தாய் நாட்டை
பந்து வீச்சால் பிரகாசிக்கச் செய்த
கறுப்புச் சூரியன் நீ!

சோதனைகளை
சாதனைகளாக்கிக் கொண்ட
வெற்றி வீரன் நீ!

ஓ....
மலையகம் தந்த முத்தே!
நீ
இந்த தேசத்தின்
தேசிய சொத்து!
சமாதானச் சின்னம்!

உன்
குறுகிய கால சாதனைகளை
இனி வரும்
நீண்ட காலங்களால் கூட
முறியடிக்க முடியாது.

முரளி....!
நீ பந்து வீசி புகழ் பெற்றாய்.
சிலர்
உன் பந்து வீச்சை
குறைப் பேசிப் புகழ்பெற்றார்கள்!

பழுத்த மரத்துக்கு
கல்லடி விழுவது புதிதல்ல
சாதனை மனிதர்க்கு
சொல்லடி விழுவது புதிரல்ல.

நீ..
விளையாட்டில் ஓய்வெடுத்தால் கூட
உன் சாதனைகள் மட்டும்
விளையாடிக் கொண்டிருக்கும்
எட்ட முடியாத உயரத்திலிருந்து!

No comments:

Post a Comment