Monday, April 12, 2010

அந்த மலர்ப் பந்தல் அருகில்



வெளிச்சமில்லாத
நெருப்புப்பந்தொன்று
பூமியை முத்தமிட
என் சின்னஞ் சிறியவளின்
சிரசு காவு கொள்ளப்பட்டது.
அது ஆகாய விமானம் அல்ல
அது உனது கொடூரம்....



இன்னொரு மனிட நிமிடத்தை
அனுபவிக்க எடுத்த முயற்சி
மரத்தின் கீழ்...அகதி முகாமில்...
.இன்னொரு குண்டு விழும்வரை...

இன்னொரு மரணத்தை காணும் வரை
கை,.கால்கள் கழன்ற பிள்ளைகளை
சேகரிக்கும் மனித நேரம்
கடந்து செல்லட்டும்....

அது உனது கொடூரம் .....

சூரிய கதிர்களாலான
மலர்கள் போன்று
எனது பிஞ்சின் கை கால்கள்
புத்துக் குழுங்க எனக்கிருந்த ஆசைகள்
வானத்தை கிழித்து வரும்
அதிசக்தி வாய்ந்த குண்டுகளை
நச்சுப் புகைகளை
எப்படி அறியும்....?


சில வேளை
விடியும் வேளையிலும்
சில வேளை
விடியலின் முன்பும்
அவை
வானத்தின் தூரத்திலிருந்து
பூமியில் விழும்போது
சுக்கு நூறாகிப் போகும்
மலர் மொட்டுக்களுக்கு
உயிர் கொடுத்த
அன்னையின் வெப்பத்தை
அந்த விசப் புகை
எப்படி அறிந்து கொள்ளும்...?

நீங்கள்
அறியாத இடத்தில்
அந்த மலர் பந்தல் அருகில்
அந்த ஒரு நிமிடத்தின் முன்பு
எனது சின்ன மகள்
பூ பறித்துக் கொண்டிருந்தாள்....

நீங்கள் அறியாத இடத்தில்
அதன் பின்பு அவள் உயிர் துடித்து
மடிந்து போனாள்...

அந்த மலர் பந்தல் பூக்கள்
இரத்தத்தால் நனைந்தன...

என்ன தேசம் இது ?
எத்தனை கற்பனைகள்?
இனி
அன்புக்குரியவர்களே!
அது உனது கொடூரம்.....

கவியாக்கம்;- சிங்களம் மூலம் : குமாரி பெர்னாண்டோ தமிழில் : கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment