Friday, August 3, 2012

கனவுக் கதவுகள்

London Tamil Radio வில் 2-8-2012 அன்று வியாழன் கவிதை நேரம் நிகழச்சியில் ஒலிபரப்பான கனவுக் கதவுகள் என்ற தலைப்பில் ஒலிபரப்பான எனது கவிதை இது




















அவர்களின் கனவுக் கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கின்றன.
ஆனால்
நனவுகள்தான் உள்ளே நுழைவதில்லை!

வறுமையில் வாடும்
ஏழையின் கனவுக் கதவு

தீப்பற்றி எரிகிறது!
தூக்கமில்லாத ஏழைக்கு
துக்கமே உணவு - இனி
எப்போது நனவாகும்
ஏழையின் கனவு ?


ஏழைக் குமரிப் பெண்ணின்
கல்யாணக் கனவு
சீதனப் பூட்டால்
பூட்டப்பட்டு கிடக்கிறது
திறப்போடு வரும்
ஆண்மகன் யார் ?


வேலையில்லாத பட்டதாரியின்
நியமனக் கனவுக் கதவு
எதிர்பார்ப்பு இறக்கை கட்டி
எப்போதும் திறந்தே இருக்கிறது.
அந்த வாசல் வழியாக
எப்போது நனவுகள் நுழையும்?


அரசாங்க ஊழியனின்
வேதனக் கனவுக் கதவு
சம்பள உயர்வு கேட்டு
ஆர்ப்பாட்டம் புரிகிறது
திறந்த அந்த கதவு வழியாக
அவன் வீ;டு சமையலறையில்
பூனை துங்குவது நன்றாகத் தெரிகிறது
அந்தக் கனவுக் கதவினூடாக
தென்றல் நுழைவது எப்போது ?


உயிரை உயிர் நேசிக்கும்
காதலரின் கனவுக் கதவு
மற்றோர்க்குத் தெரியாமல்
மூடி மூடித் திறக்கிறது.
மண நாள் அறங்கேறி
அந்தக் கனவுக் கதவின் வழியாக
இல்லறத்தில் நுழைவ தெப்போது?


எழுத்துச் சுதந்திரம் வேண்டி நிற்கும்
ஊடகக் கனவுக் கதவு
'
சீல்' வைக்கப்பட்டு
ஊமையாய் கிடக்கிறது
அந்தக் கதவுகள் திறக்கப்பட்டு
உரிமை காற்று நுழைவதெப்போது ?


முகாம்களில் அல்லற்படும்
அகதிகளின் கனவுக் கதவு
களவாடப்பட்டு அம்பலமாய் கிடக்கிறது!
அந்த தேச மக்களின்
கனவுக் கதவு வழியாக
நீதி நுழைவதெப்போது?

கனவுக் கதவுகள்
வெற்றியின் உறவுகளா?
கனவுக் கதவுகள்
நம்பிக்கையின் விடியல்களா?
கனவுக் கதவுகள்
நனவுகளின் நிழல்களா?
விடை தெரியாமல்.....
அவர்களின் கனவுக் கதவுகள்
எப்போதும் திறந்தே இருக்கின்றன.

- கலாநெஞ்சன் ஷாஜஹான்


No comments:

Post a Comment