Tuesday, November 10, 2009

மீண்டும் எழுவோம்


மீண்டும் எழுவோம் மானிடரே-எங்கள்
மானுட வலிமை போதும் இங்கே
மீண்டும் தேசத்தை எழுப்பிடுவோம்-இனி
எங்கள் கரங்களை இணைத்திடுவோம்
(மீண்டும்)

புதிதாய் இனிமேல் பிறப்பெடுப்போம்-வரும்
புதிர்களுக்கெல்லாம் விடைக்கொடுப்போம்
சோதனை வந்தால் வேதனைதான்-அதன்
போதனை புரிந்தால் சாதனைதான்
நடந்தவை கடந்தவை மறந்தவையே-இனி
நடப்பவை யாவும் நல்லவையே
இயற்கையில் பாடம் நாம் படித்தோம் -இனி
ஐக்கிய தேசத்தை நாம் படைப்போம்


எங்கள் அன்னை தேசமே
நீதான் எங்கள் சுவாசமே
நால்வகை மதங்களும் சொந்தமே
எல்லா மாந்தரும் பந்தமே
(மீண்டும்)

ஒரே தேசத்து பிள்ளைகள் நாம்
ஒரே தோட்டத்து முல்லைகள் நாம்-இங்கு
எட்டுத்திசையும் ஒரே குலம்
எட்டுத் திசையும் ஓரே சமம்
பேரலையில் எதிர் நீச்சலிட்டு
கரைதனில் ஒன்றாய் சேர்ந்துவிட்டோம்
தரை தனை மீண்டும் வளமாக்கி -சொந்த
மண்ணில் நன்றாய் வாழ்ந்திடுவோம்

இலங்கை எங்கள் அன்னையே
நாங்கள் இழந்தோம் எம்மையே
மீண்டும் எழுவோம் உண்மையே
இனிமேல் எல்லாம் நன்மையே
(மீண்டும்)

தேசம் செழிக்க உழைத்திடுவோம்- மானுட
நேயத்தை வளர்த்திடுவோம்
பேதங்கள் எல்லாம் மறந்திடுவோம் - வீண்
வாதங்கள் இன்றி வாழ்ந்திடுவோம்
வாடும் மனங்களை ஆற்றிடுவோம்
வாழும் வகையினில் மாற்றிடுவோம்
கவலைகள் தன்னை போக்கிடுவோம் - வரும்
தடைகளை எல்லாம் நீக்கிடுவோம்

எழில்மிகு அன்னை தேசமே
எழுவோம் உலகம் போற்றவே
விழுவதும் எழுவதும் நியதியே – எங்கள்
வாழ்வது உயர்வது உறுதியே
(மீண்டும்)

(“சுனாமி”யினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ஆற்றுப்படுத்துகைக்காக இலங்கை தேசிய நூலபிவிருத்தி சபையினால் அகில இலங்கை ரீதியில் 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடலாக்கப் போட்டியில், என்னால் எழுதப்பட்ட இப்பாடல் முதல் பரிசு பெற்று , 25 ஆயிரம் ரூபா பரிசையும் சான்றிதழையம் பெற்றது.

பாடலாக்கம் - கலாநெஞ்சன் ஷாஜஹான்

No comments:

Post a Comment