Saturday, November 17, 2012

ஒரு மனிதனின் அழைப்பு





லண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில் 15-11--2012 அன்று ஒலிபரப்பான  கவிதை



ஒரு மனிதனின் அழைப்பு

என் இலட்சியக் குதிரை
ஓடாது தடுக்க
ஓன்றாய் கூடியிருப்பவர்களே!

புரிந்து கொள்ளுங்கள்!
உங்கள்
தடைகள்தான்
என்
வெற்றிக்கான விடைகள்!

என் மடியில் கனமில்லை
அதனால்
வழியில் பயமில்லை!

ஆனாலும் கனமிருப்பதாக
எண்ணிக் கொண்டு
உங்கள் கணங்களை அல்லவா
செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

பூக்கும் பூக்கள் எல்லாம்
பூஜைக்குப் போவதில்லை.
கூந்தலுக்கு சில பூக்கள்
கழுத்துக்குச் சில  பூக்கள்
காயாகும் சில பூக்கள்
கண்காண சில பூக்கள்

மணத்திற்கு சில பூக்கள்
மரணத்திற்கு சில பூக்கள்
உதிரியாக சில பூக்கள்
உதவாத சில பூக்கள்

மனிதர்களும் அப்படித்தான்
நீங்கள் எப்படி?

கனிந்த
மரத்திற்குத்தான்
கல்லடி விழும்
சாதனை மனிதருக்குத்தான்
சொல்லடி விழும்!

கூக்குரல்கள்
கீதமாவதும் இல்லை
நல்ல
வாதமாவதும் இல்லை!

முகத்துக்கு முன்னால்
மலரையும்
முதுகுக்குப் பின்னால்
முள்ளையும்
நீட்டுபவர்கள்
மனிதர்கள் அல்ல!

ரோஜா செடியில்
முள் கூட
தெரியும் படியாகத்தான் இருக்கிறது.

சில மனித
மனங்களை போல்
மறைவாக அல்ல!

அதனால் மனிதர்களே
வாருங்கள்!
முகத்துக்கு முன்னால் வாருங்கள்
முதுகுக்குப் பின்னால்
நீங்கள் கோழைகள்!! 

No comments:

Post a Comment