Sunday, August 21, 2011

மைக்கல் ஜக்சனுக்கு மரணமில்லை




இசைக்கு
மரணமா?
இசையே ....!
நீ
எப்படி இறந்தாய்...?
உனக்கேது மரணம்?

ஓ....
மைக்கல் ஜக்சன்!
ரசிக இதயங்களில்
சிம்மாசனம் அமைத்து
சக்கரவர்த்தியாய் அமர்ந்தவனே!


இன வேறுபாட்டை
இசையால் உடைத்தெறிந்த
இனிய வீரன் நீ!
நிறவெறியை சுட்டுப் பொசுக்கிய
கறுப்பு நெருப்பு நீ!
உன்னத இசையால்
உலக இதயங்களை
வருடியவன் நீ!
இல்லை
திருடியவன் நீ!

இசைக்கு
மொழியில்லை என்பதை
ஊர்ஜிதப்படுத்தியவன் நீ!

நீ
ஆடினாலும் பாடினாலும்
பாடி ஆடினாலும்
உனக்கு நிகர்
நீ தான்!

நீ இசையின்
வரலாற்றுப் புத்தகத்தில்
புதிய அத்தியாயத்தை
புதுமையாய்
ஆரம்பித்தவன்!

நீ
வேதனைகளை
சுமந்து கொண்டு
சாதனைகளில்
சரித்திரம் படைத்தவன்

புயல்களில் சிக்கிக் கொண்டு
தென்றலாய் வீசியவன்.

இசையால்
உலகத்தை கட்டிப்போட்ட
மந்திர வித்தைக்காரன் நீ

உனது பாடலில்
மானிட நேயத்தை
மனித சோகத்தை
உலகின் அவலத்தை
உணர்வுகளின் வெளிப்பாட்டை
தனிமையை , வெறுமையை
காதலை, பிரிவை
அன்பை, பாசத்தை
எல்லாம்
இசைக்கு உயிர் கொடுத்து
உயிருக்கு இசை கொடுத்து
உலகுக்கு வெளிப்படுத்தினாய்..

ஆனால்
உன்னை மட்டும்
உன்னில் நீ
ஒளித்துக் கொண்டாய்!

உள ஆரோக்கியத்திற்கு
இசையெனும்
மருந்து வழங்கிய
வைத்தியன் நீ!

ஆனால்
நீ மட்டும்
நச்சு மருந்துகளை
நாளும் உட்கொண்டு
ஏன் நோயாளி ஆனாய்?

நீ
'கிட்டாரின்' நரம்புகளை
விரல்களால் மீட்டி
கீதங்களை பிரசவித்தாய்.
ஆனால்
உனது நரம்புகளை
போதைகளுக்கல்லவா
மீட்டக் கொடுத்தாய்!

நீ
ஒரு புரியாத புதிர்!
நீ
உன் உடலையே
செதுக்கிய சிற்பி!

கோடீஸ்வரனாய் வாழ்ந்த
கடனாளி!

மனிதம்
மரணித்துப் போன உலகில்
மரணம்
மலிந்து போன மண்ணில்
உனது மரணம் கேட்டு
இதயங்களை
ஸ்தம்பித்துப் போயின.
எப்படி இருந்தாலும்
நீ எப்படி இறப்பாய்?
உனக்கு மரணமில்லை!
அலைகள் ஓய்வதில்லை.
சரித்திரங்கள் சாவதில்லை..!
                           - கலாநெஞ்சன் ஷாஜஹான்

"சுகவாழ்வு" -ஆரோக்கிய சஞ்சிகையில் 2009 ,ஆகஸ்ட் மாத இதழில் பிரசுரமான கவிதை)

No comments:

Post a Comment